சென்னை . ஜன.7
முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 564 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்கு அடையாளமாக 7 பேர் பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் உபரி பணியாளர்களாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளர் நிலையில் காலியாக உள்ள பணி யிடத்துக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு 491 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு முதல் அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 43 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நியமன ஆணைகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூரில் 7 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட காவல் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் ரூ. 28 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரம் மேலும் ரூ. 28 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், 7 காவல் நிலையங்கள், 5 காவல்துறை இதர கட்டிடங்கள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கான 55 குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் ரூ.9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை காணொலிக் காட்சி மூலம் முதல் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், ரூ.86 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பள்ளிக் கட்டிடங்கள், 3 ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனக் கட்டிடங்கள் மற்றும் ஒரு ஆசிரியர் இல்லக் கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதா கிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.