கொரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நீதி ஒதுக்கீடு.... கேரள முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம்,


கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது.


   


இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத் துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 206 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் இன்றோடு 5 பேர் பலியாகியுள்ளனர்.


இந்நிலையில் கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள கேரள அரசு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, குடும்பஸ்ரீ திட்டங்களின் கீழ் வரும் குடும்பங்களுக்கு ரூ.2000 கோடிக்கு கடன் வழங்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்படுகிறது. முதியோர்களுக்கு இரண்டு மாதத்திற்கான ஓய்வூதியம் முன்கூட்டியே வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்காக ரூ.1320 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு சார்பில் உணவகங்கள் திறக்கப்பட்டு ரூ.20 க்கு உணவு வழங்கப்படும். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.