தேனி உத்தமபாளையம் ஊராட்சி பகுதியில் அரசு நிதி கிடைக்காமல் பணி தொய்வு

தேனி, ஏப்.1தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் மொத்தம் மூன்று ஒன்றியங்கள் மூன்று நகராட்சிகள் எட்டு பேருராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் ஆணையாளர், செயல் அலுவலர்கள் அரசு பணியாளர்கள் மூலம் வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும், பொதுமக்களிடம் கொரோனோ வைரஸ் தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ஆனால் ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் வரை பொதுமக்கள் தேர்வு செய்துள்ளனர். இதில் சில ஊராட்சி தலைவர்கள் முழு மனதோடு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் கிருமி நாசினி தெளிப்பது, குறிப்பாக தே.ரெங்கநாதபுரம், அப்பிபட்டி என்ற அழகாபுரி, வாய்க்கால்பட்டி என்ற ராமசாமி நாயக்கன்பட்டி, ராயப்பன்பட்டி போன்ற பலஊராட்சிகளில் மூலிகை கிருமி நாசினிகளான வேப்பிலை, மாட்டுக் கோமயம், மஞ்சள் போன்றவைகளை ஒன்றாக கலந்து, தெருவில் மட்டுமல்லாது வீட்டுச் சுவர்களிலும் தெளித்து வருகிறார்கள்.


இவர்களின் சேவையை கண்டு தன்னார்வலர்களும், பொதுமக்களும் உதவி வருகிறார்கள். சில ஊராட்சிகளில் தன்னார்வலர்களைத் தவிர ஊராட்சி பணியாளர்கள் பணி சுனக்கமாகவே நடைபெற்று வருகிறது. காரணம் கேட்டால் அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் பணியாளர்களுக்கு இன்னும் ஊதியமே கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து வருகிறார்களாம். எனவே கொரோனா என்னும் கொடிய வைரசிடமிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு நிதி கிடைக்க நடவடிக்கை வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் துரித நடவடிக்கையால் இன்று வரை கொரோனா இல்லா மாவட்டமாகத் திகழ்கிறது. இதே நிலை தொடர ஆட்சியர் அனைத்து ஊராட்சிகளிலும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.