இத்தாலியில் 4 சதவிதமாக குறைந்த கொரோனா
ரோம்,

 

சீனாவுக்கு அடுத்து தனது ஆதிக்கத்தை கொரோனா வைரஸ் இத்தாலியில் செலுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் இத்தாலியில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது அந்நாட்டு மக்களிடையே நம்பிக்கையை விதைத்துள்ளது.

 


 

கொரோனா வைரசால் இத்தாலியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், அங்கு தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 


 

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது. இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 3ந்தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த  ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

ஊரடங்கு நீண்ட காலம் நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.


 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 812 பேர் பலியானதை அடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 11,591 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பரவும் வீதம் 4.1 சதவீதமாக குறைந்திருப்பதாக அந்நாட்டின் குடிமக்கள் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் இத்தாலியில் கொரோனாவின் மையமென கருதப்படும் வடக்கு லோம்பர்டியிலும், பாதிப்புகள் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,590 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் குணமடைந்தவர்களில் இதுவே அதிகபட்சம் என்றும் தெரிவித்துள்ளனர்.  

 

கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.