கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

 வேலூர்


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக மேற்கொ ள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ. சண்முகசுந்தரம், முன்னிலை வகித்தார்கள். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


அனைத்து பகுதிகளிலும் தூய்மை செய்யும்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருவாய்த்துறை, மருத்து வத்துறை மற்றும் காவல்துறை கொண்டு நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இவற்றில் எவ்வித அலட்சியமும் இருந்து விடக்கூடாது. ஏனெனில் இவர்கள் மூலமாக இந்த நோய் தொற்று பரவிட அதிக வாய்ப்பு உள்ளது. வளர்ந்த உலக நாடுகள் எல்லாம் இந்த நோய் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நாட்டு மக்கள் அரசு தெரிவித்த உத்திரவினை அலட்சியப்படுத்தியதனால் தற்போது உயிர் பலி கட்டுக்கடங்காமல் நிகழ்ந்து வருகின்றது.


ஆனால் இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நமது மக்களை காத்திட வரும் முன் காப்போம் என்பதன் அடிப்படையில் இந்த நோய் தாக்கத்திலிருந்து காக்க ஊரடங்கை நடைமுறை படுத்தியுள்ளார்கள். இந்த நடவடிக்கைக்கு நமது மக்கள் நல்ல ஆதரவை தந்து வருகிறார்கள். சில இடங்களில் இளைஞர்கள் வெளியில் வருகிறார்கள் இதனையும் கட்டுப்படுத்திட வேண்டும். இந்த நாட்களில்அரசு அனைத்து மக்களும் அன்றாட தேவைகளை கிடைத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் சில நடைமுறைகளை வழங்கியுள்ளது. மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சை முறைகளும் தயார் நிலையில் உள்ளது.


இந்த கடுமையான பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து துறை அலுவலர்களும் நமது பாமர மக்களை நோய் தாக்கத்திலிருந்து காத்திட அயராது பணியாற்றிட வேண்டும். தீயணைப்பு வானங்கள் மூலமாக கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும் எனவும், நமது மாவட்டத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக திகழ எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.