ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபா கூட்டம்


ஈரோடு, 


    ஈரோடு மாவட்டத்திலுள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபா கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.


   மேலும் தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.01.2020 அன்று கிராம சபா கூட்டம் நடைபெறவுள்ளது.


   கிராமசபா கூட்டம் பற்றி மக்களிடையே குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக்குழு அங்கத்தினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு சமுதாய கடமையாற்றிடவும்,


   மற்றும் ஊராட்சிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, திறந்த மற்றும் செயலிழந்த ஆழ்த்துளை கிணறுகளை கண்டறிந்து விபத்துக்கள் நிகழ்வதைத் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், தூய்மைப்பணி மேற்கொள்ளுதல், திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்தல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படும் முனைப்பான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் கேட்டுக்கொண்டுள்ளார்.