ஈரோடு,
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, பயிர் சாகுபடியில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பினை ஈடு செய்ய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பு ரபி 2019-20 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய, நெல் 3 (நவரை), மக்காச்சோளம் 3, நிலக்கடலை, கரும்பு, எள், வாழை, மரவள்ளி, வெங்காயம், வெண்டைக்காய், முட்டைக்கோஸ் மற்றும் கொய்யா ஆகிய பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் பெறும் விவசா யிகள் கட்டாயமாக இத்திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.
பயிர்கடன் பெறா விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம்.
நில ஆவணங்களான சிட்டா, அடங்கள்/விதைப்பு சான்று, வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் நகல் ஆகியவை காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்களாகும்.
நடப்பு ரபி 2019-20 பருவத்தில் நெல்3 (நவரை) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.478.50-ம், மக்காச்சோளம் 3 பயிருக்கு ரூ.400.50ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.421.50-ம், கரும்பு பயிருக்கு ரூ.2,875-ம், எள் பயிருக்கு ரூ.186.75-ம், வாழை பயிருக்கு ரூ.4,070-ம், மரவள்ளி பயிருக்கு ரூ.1,675-ம், வெங்காயப் பயிருக்கு ரூ.1907.50-ம், வெண்டைக்காய் பயிருக்கு ரூ.497ம், முட்டைக்கோஸ் பயிருக்கு ரூ.922.50-ம், கொய்யாவுக்கு ரூ.1,100-ம், காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். நெல்3 (நவரை), மக்காச்சோளம் 3, நிலக்கடலை, எள், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களுக்கு வரும் 31 ஜனவரி 2020ம், வெண்டைக்காய் மற்றும் வெங்காயப் பயிர்களுக்கு வரும் 15 பிப்ரவரி 2020ம், வாழை, மரவள்ளி மற்றும் கொய்யா பயிர்களுக்கு வரும் 28 பிப்ரவரி 2020ம், கரும்பு பயிருக்கு வரும் 31 அக்டோபா; 2020ம் காப்பீட்டு கட்டணம் செலுத்த கடைசி நாளாகும்.
இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தவறாமல் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.