ஈரோடு, ஜன.8
பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் :
1. தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள்.
2. பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும்.
3. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்து தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார்.