விருதுநகர்,
காரியாபட்டி அருகே டி.வேப்பங்குளம் கிராமத்தில் வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்துள்ளது. இதனை கண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து சென்றனர்.
காரியாபட்டி அருகே டி.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள வாழகுருநாதர் அங்காள ஈஸ்வரி கோவில் வாசலில் உள்ள வேப்பம் மரத்தில் திடீரென நேற்று முன்தினம் பால் வடிய ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்த மக்கள் கூட்டம் கூட்டமாக மரத்தினை பார்வையிட்டு சென்றனர். பால் வடிவது சிறிது நேரம் கூட நிற்கவில்லை வடிந்த பாலை மக்கள் பிடித்து குடித்து பார்த்தபோது இனிப்பாக இருந்துள்ளது. உடனே அதற்கு பூ, மாலை, மஞ்சள் தடவி சாமி கும்பிட ஆரம்பித்தனர்.
இதுகுறித்து அந்த கோவில் நிர்வாகி செல்லம் கூறுகையில் கோவில் ராஜ கோபுரம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு வேலைகள் நடப்பு நடந்து வருகிறது.
கோவிலின் தலைவாசலில் சன்னிதானத்தை மறைக்கும் வகையில் வேப்பமரம் இருக்கிறது இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து வேப்பமரத்தை வெட்டி எடுப்பது என பேசினோம். பேசிய மூன்று நாட்களில் வேப்ப மரத்தில் பால் வடிவது நம்ப முடியாத ஒரு செயலாக இருந்தாலும் மரத்திற்கும் உயிர் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுகிறது என்றார்.