தவறான சிகிச்சையால் கர்ப்பனி இறந்தாரா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 கடலூர்,


       கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆவடி அருகே உள்ள கலர் குப்பம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பிரியா பிரசவத்திற்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது



    இந்நிலையில் திடீரென்று பிரியாவுக்கு வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். பிரசவத்தின் போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததால் பிரியா உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.


      இதைத்தொடர்ந்து விருத்தாச்சலம் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக கடந்த 3ம் தேதி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் அந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.


      பின்னர் இந்த விவகாரத்தில் தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.