எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


 


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை- மார்த்தாண்டம் சந்தைரோட்டில் மணல் கடத்தலை தடுப்பதற்காக தனி சோதனை சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி  தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணி  அமர்த்தப்பட்டதால், ஒரு போலீஸ்காரர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


   நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) என்பவர் பணியில் இருந்துள்ளார்.


       


       இரவு சுமார் 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சோதனைசாவடிக்கு சென்று அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் வாய்ப்போரில் ஈடுபட்டதாக தெரிகிறது. தீடிரென மர்மநபர்கள் எஸ்.ஐ வில்சனை துப்பாக்கியில் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்து சென்றனர். துப்பாக்கி சத்ததைக் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதியினர்,ஆம்புலன்ஸ்சில் எஸ்.ஐ வில்சனை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். 


மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வில்சன் கொலை தொடர்புடைய 2 சந்தேக நபர்களின் புகைப்படைங்களை வெளியிட்டு உள்ளனர்.

 

அவர்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் சமீம், தெளபீக் ஆகியோர் ஆவர். அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

 எஸ்.ஐ வில்சன் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.