மதுரை:
தமிழகத்தில் அரசு பணிக்காக முறையாக படித்து தேர்ச்சி பெறுபவர்கள் மத்தியில் தகுதியின்றி ஆள்மாறாட்டம் செய்து அரசு வேலை வாங்குவது அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் அரசு பணிக்காக நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தட்டச்சு தேர்விலும் ஆள் மாறாட்ட மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அரசு தொழில் நுட்ப துறையில் தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்களின் அடிப்படையில் மரகதம் என்ற பெண் பணி அமர்த்தப்பட்டார். நாளடைவில் இவருக்கு தட்டச்சு செய்ய தெரியவில்லை என்பது மேலதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் இவர் தட்டச்சு தேர்வில் எப்படி தேர்ச்சி பெற்றார்..? என்று மேல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவரை விசாரித்தபோது மரகதம் ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.
மரகதம் மதுரையில் விளாங்குடியைச் சேர்ந்தவர். காமராஜர் சாலையில் உள்ள இன்ஸ்டியூட்டில் தட்டச்சு பழகினார். அங்கு தட்டச்சு படிக்க வந்த விக்னேஷ் என்பவர் மரகதம் தேர்ச்சி பெற உதவி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேர்வுத்துறை உதவி இயக்குனர் அழகு காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பெண் ஊழியர் உட்பட இன்ஸ்டியூட் உரிமையாளர் நாதன், விக்னேஷ் ஆகிய 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.