18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா ராஜினாமா செய்தார்


புதுடெல்லி,


மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக கமல்நாத் பதவி வகித்து வருகிறார். 


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கமல்நாத் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேருடன்  ஜோதிர்ஆதித்யா சிந்தியா கர்நாடகாவுக்கு சென்றதாக கூறப்பட்டது.


ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை. இத்தகைய சூழலில்,  காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா பிரதமர் மோடியை  சந்தித்துப் பேசினார்.  பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்தார்.


அதன்பிறகு,காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து  ஜோதிர் ஆதித்யாசிந்தியா  ராஜினாமா செய்துள்ளார்.


 காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்று ஜோதிர்ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் அவசியம். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகிறேன்.


 18 ஆண்டுகளாக இருக்கிறேன் - தற்போது விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே இந்த பாதையில் இருந்தேன்" என்று தெரிவித்தார்.