மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

ஆவடி, மார்ச்.19- ஆவடி, காந்தி நகரை சேர்ந்தவர் குப்பன், 52. இவரது மனைவி வாசுகி, 45. இவர்களது மகன் சிவராமன், 27. அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்  இரவு இருசக்கர வாகனத்தில் .டி.எச். சாலையில் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் ஆவடி பேருந்து நிலையம் அருகே சென்றபோது தடம் எண் 62 என்ற மாநகர பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சிவராமன் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.


       


இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து கற்களை  வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.


தப்ப முயன்ற நடத்துனரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து பூந்த மல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பேருந்து ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.