யூடியூப் மூலம் காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன் கைது...  பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

திருவள்ளூர்,


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காதலியின் வயிற்றை அறுத்து காதலன் பிரசவம் பார்க்க முயன்றதில் குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மவார்பாளையம் பகுதியைச் சேர்ந்த எரிவாயு சிலிண்டர் விற்பனை மையத்தில் மையத்தில் பணிபுரியும் சௌந்தர்(26) அதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி நர்மதா(19)என்கிற பெண்ணை 5 வருடமாக காதலித்து இருவரும் பழகி வந்தனர். இரு வீட்டாருக்கும் இவர்களது காதல் சம்பவம் தெரிந்திருந்த நிலையில் இதற்கு சௌந்தரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில் நர்மதா கர்ப்பமான நிலையில் அவரது தாயாரிடம் தான் எடை போட்டுள்ளதாகவும் தொப்பை விழுந்துள்ளதாகவும் கூறி அவரது தாயிடம் கர்ப்பத்தை மறைத்துள்ளார்.


இந்நிலையில் நர்மதா 9 மாத கருவைச் சுமந்த நிலையில் கர்ப்பத்தை இனியும் மறைக்க முடியாது என்று இருவரும் முடிவெடுத்து குழந்தையை வெளியே எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.


அதன்படி சௌந்தர் யூடியூபில் பிரசவம் பார்ப்பது குறித்த வீடியோவை பார்த்து கையுறை உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளார். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நர்மதா பொன்னேரியில் அவர் படிக்கும் அரசு கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பாமல் ஈகுவார்பாளையம் பகுதியில் உள்ள காப்புக் காட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு சௌந்தர் யூடியூபில் பார்த்தபடி நர்மதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார்.


இதில் வயிற்றிலிருந்து குழந்தையில் கை வெளியே வந்த நிலையில் சௌந்தர் குழந்தையின் தொப்புள்கொடியை அறுப்பதாக நினைத்து நர்மதாவின் குடலை அறுத்துள்ளார். இதில் நர்மதாவிற்கு ரத்தப் போக்கு அதிகரித்தது.


தொடர்ந்து நர்மதாவை சௌந்தர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் முதலுதவி பார்த்த மருத்துவர்கள் கவலைக்கிடமாக இருந்த நர்மதாவை சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் நர்மதாவிற்கு அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையிலிருந்த ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.


இந்நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள நர்மதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் குறித்து நர்மதாவின் தாய் இந்திரா ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து சௌந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.