சென்னை குடிநீர் வாரியம் சார்பில் செம்பரம்பாக்கத்தில் முதல் சோலார் மையம்

சென்னை ,


 சென்னைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 800 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வரும் மெட்ரோ குடிநீர் வாரியத்தின் செலவுகளில் மின்சார கட்டணத்திற்கு மட்டுமே 30 முதல் 40 சதவீதம் வரை வருகிறது.


இந்த செலவை குறைப்பதற்காக சோலார் மையங்கள் அமைக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் குடிநீர் வாரியம் தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்கி உள்ளது.



இந்த அமைப்பு தொழில் நுட்ப ரீதியாக குடிநீர் வாரியத்துக்கு உதவும் வகையில், காலியாக உள்ள குடிநீர் வாரிய இடங்களில் சோலார் மையங்களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கூறியது. அதன்படி செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் முதல் சோலார் மையத்தை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


மே மாதத்தில் இந்த பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த மையம் நகரம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக வசதிகளை இயக்குவதற்கான மின்சாரம் தயாரிப்பதற்கான மையமாக விளங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சென்னையில் குடிநீர் வசதிகளை செய்வதற்கு மட்டும் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதில் கிட்டத்தட்ட 25 மெகாவாட் இந்த சோலால் மையம் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.


இந்த சோலார் மையம் தனியார் அல்லது பொது நிறுவனத்தால் பராமரிக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.4.50க்கு வாங்க திட்டமிட்டுள்ளது இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி மற்றும் பேரூரில் மேலும் இரண்டு ஆற்றல் மிகுந்த உப்பு நீக்கும் ஆலைகள் வருவதால் சூரிய நிறுவனம் மற்றும் காற்றாலை ஆற்றல் ஆகியவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியத்தையும் குடிநீர் வாரியம் ஆய்வு செய்து வருகிறது.