கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொதுமக்களுக்காக இலவச கழிப்பிடம் மற்றும் குளியலறை கட்டப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஐந்து தனிநபர் கழிப்பறைகள் வைத்துள்ளனர்.
இதுவரை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த மைதானத்தில்தான் முக்கிய அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள் நடக்கும் இதனை சுற்றி அரை கிலோ மீட்டர் சுற்றளவில் முக்கிய அலுவலகங்களான அரசு தலைமை மருத்துவமனை, கடலூர் மாவட்ட நீதிமன்றம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கிளை சிறைச்சாலை, பள்ளிக்கல்வி துறை அலுவலகங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், நகராட்சி பள்ளி மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்துபோகும் இச்சாலையில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வயதானவர்கள் உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.
இவர்கள் இயற்கை உபாதைகள் செல்ல வேண்டும் என்றால் எங்கே செல்வது என்று தெரியாமல் அதனருகே மைதானத்தில் வெட்ட வெளியிலே இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது.
இதன் அருகிலேயே சிறுவர் பூங்காவும் உள்ளது. குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த இலவச கழிப்பறையை மிக விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.