வாராக் கடனில் சிக்கித் தவிக்கும் தொழில் நிறுவனங்கள் கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது வங்கி திவால் சட்டம் (Insolvency| and bankruptcy code).
இந்த சட்டம் 2016ம் ஆண்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று செயல்பாட்டிற்கு வந்தது. வங்கி திவால் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தாலும் பல விதமான பிரச்சனைகளைச் சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது வாராக்கடனில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
வங்கி திவால் சட்டத்தின் விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனமானது 330 நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டு, அதன் கடன் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
அப்படி அந்த நிறுவனம் தொடர்பான விசாரணை 330 நாட்களுக்குள் முடிக்கப்படவில்லை எனில், அந்த நிறுவனத்துக்கு கடன் தந்த நிறுவனங்கள் கடனுக்கு ஈடாக கொடுக்கப்பட்ட சொத்தினை விற்று, அந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் யெஸ் வங்கி எந்த கேரன்டியும் இல்லாமல் கோடி கணக்கில் கடன் அளித்ததால், பணத்தை திரும்ப பெற வழி இல்லாமல் தற்போது ரிசர்வு வங்கி, யெஸ் வங்கியை தன் வசத்தில் வைத்துள்ளது.
கடந்த சில ஆண்டு இது போல் பல வங்கிகளும், நிறுவனங்களும் வாராக்கடனால் சிக்கி மீண்டு வந்துள்ளது. அதில், 2014ம் ஆண்டு எஸ்ஸார் நிறுவனம், வீடியோகான் நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கிங்ஃபிஷர் விமான நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் என பல நிறுவனங்கள் உள்ளது.
இத்தனை நிறுவனங்கள் தொடர்ந்து வாராக் கடனில் சிக்கி தவித்த பிறகும் இன்னும் இப்பிரச்சனைக்கு முடிவு காண முடியவில்லை. இதனால் வங்கிகள் எதாவது பாடம் கற்றுக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை. இப்படி வாராக் கடனால் பாதிப்படையும் வங்கி நிறுவனர்களும் வெளிநாட்டிற்கு சென்று பதுங்கும் நிலையும் அதிகரித்துவிட்டது.
வங்கி திவால் சட்டத்தின் கீழ் கடன் வாங்கி திரும்பி தராதவர்கள் மேல் கிரிமினல் வழக்கு போட்டாலும் பணம் திரும்பி கிடைப்பது என்பது கேள்விக் குறியாகத்தான் உள்ளது. தொழில் நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தால் வங்கிகள் இந்த அளவுக்கு பாதிப்பை சந்திக்கிறது.
வங்கி கொள்ளைகள், வாராக் கடன் சிக்கல் என்று வங்கிகள் அடுக்கு அடுக்காக பிரச்சனைகளை சந்திப்பதால். பொது மக்களும் வங்கியில் பணம் சேர்ப்பதற்கு ஐயம் கொண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.