நகரி,
ஆந்திராவில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்து பிறகு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
இதில், முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வீடு தேடி சென்று பென்சன் வழங்கும் திட்டம் மார்ச் 1ந்தேதி முதல் அமல் படுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்காக அரசு சார்பில் தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பின்படி நேற்று முதல் வீடு தேடி சென்று பென்சன் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. நேற்று அதிகாலை 6 மணிக்கே ஊழியர்கள், பென்சன் வாங்கும் முதியோர், ஊனமுற்றோரின் வீடுகளுக்கு சென்றனர். அவர்களுக்கான பென்ஷன் தொகையை வழங்கினர்.
இந்த திட்டம் மூலம் முதியோர் ஊனமுற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது: 'பென்ஷன் தொகை வாங்க கிராமம் முதல் நகரங்கள் வரை பஞ் சாயத்து அலுவலகம், நகரசபை, மாநகராட்சி அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய திருக்கும். கொளுத்தும் வெயில், மழையில் நின்று பென்ஷன் வாங்கினோம்.
மேலும், மறுநாள் வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அதேபோல் சிக்னல் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் பலமுறை அலைகழித்து வந்தனர்.
நடக்க முடியாதவர்கள் ஆட்டோவில் பல முறை செல்வதால் கூடுதல் செலவு செய்யப்படுகிறது. இதற்கு பென்சன் தொகையில் பாதி செலவாகிவிடும். எங்களது கஷ்டங்களை உணர்ந்து வீட்டிற்கு தேடி வந்து பென்சனை வழங்கும் திட்டத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம்' என்றனர்.