அண்மையில் ஊடகங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிகின்றன. அரசு பணிகளுக்கு தேவையானவர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வு போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர். இதற்காக உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
இந்த தேர்வுகளில் வெல்பவர்கள் வருவாய் வட்டாச்சியர், கோட்டாச்சியர், நகராட்சி ஆணையாளர், துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்படுவர். அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பது சமுதாயத்தில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் கனவாகவே உள்ளது.
பலர் அரசு பணியில் அமர்வதற்காக அயராது படித்து தேர்வுகளுக்கு தயராகுகின்றனர். சிலர் முறைகேடுகள் செய்து தேர்ச்சி பெற முற்படுகின்றனர். இதனால் மக்களுக்கு தேர்வு முறையின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு, 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2A தேர்வு, 2016ம் ஆண்டு நடந்த கிராம சபை தேர்வுகள், தட்டச்சு தேர்வு, ரயில்வே, அஞ்சல் துறை தேர்வுகள், காவலர் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது.
இந்த அனைத்து தேர்வுகளிலும் நடந்த மோசடிக்கு ஊழல் தான் முக்கிய காரணம். அரசுப் பணியிடங்கள் நிரப்புவதில் லஞ்சம் விளையாடும் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. பாமர மக்களுக்கே இந்த விசயம் தெரியும். மேலும், கொடுக்கப்படும் லஞ்சம் யார் வழியாக யார் யாரையெல்லாம் சென்றடையும் என்பதும் தெரிந்த விசயங்கள்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஒருபடி மேல் சென்று தேர்விலேயே முறைகேடுகள் செய்துள்ளார்கள் என்பதுதான் வேறுபாடு.
அரசு தேர்வுகளில் தானே முறைகேடுகள் நடைபெறுகிறது இது அரசாங்கம் கண்டிக்க வேண்டிய விடயம் நம்மால் என்ன முடியும் என்று மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது. அரசு பணி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடு வெறும் ஊழல் மட்டுமல்ல தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சியாகும்.
தேர்வில் தேர்ச்சி பெற இத்தனை தப்பிதங்களை செய்கின்றவர்கள் நாளை அதிகாரத்திற்கு வந்தால் நாடு தாங்குமா…!? எப்போது முற்றுப்பெறும் அரசு பணி முறைகேடு.