தமிழகத்தின் முன்மாதிரி பள்ளி .....வியக்க வைக்கும் மாணவர்களின் சமூக செயல்பாடுகள்

தேனி, 


    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 5 வருடத்துக்கு முன்னர் தலைமை ஆசிரியராக பணியில் அமர்ந்தார் மோகன், தற்போது அந்தப் பள்ளி தேனி மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளியாக, உருவாக்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.


22 வருட ஆசிரியர் பணி அனுபவம் கொண்டவர் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகன் தனது பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதற்காகவும் இப்பள்ளி மாணவர்களிடம் தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டும் என்று தனது சிறு முயற்சியை மேற்கொண்டார். அதன் விளைவு தற்போது எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை, ஒரே வளாகத்தில் உள்ள பள்ளி தேனி மாவட்டத்திலேயே இப்பள்ளி மட்டும் தான்.



பள்ளி மாணவர்களிடையே மாற்றம் வேண்டும் என்றால், நாம் சொன்னால் மட்டுமே மாற்றம் வந்துவிடாது. அதை மாணவர்களே கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கினார். அதுதான், மாணவர் நாடாளுமன்றம். இதற்காக ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களைக் கொண்ட மாணவர் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது.


பள்ளி மாணவமாணவர்களில் யார் வேண்டுமானாலும் இப்பதவிகளுக்குப் போட்டியிடலாம். போட்டியிடுபவர்கள், பள்ளிக்காக என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை மாணவர்கள் முன்னிலையில் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும்.


அப்படி, வருடா வருடம், மாணவர் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. 15 நாள்களுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் கூடும். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.


பள்ளிக்குத் தாமதமாக வருகை தரும் மாணவர்களை தண்டிக்காமல், பள்ளி முடிந்ததும் 15 நிமிடம் பள்ளி வளாகத்தில் உள்ள மரம், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என மாணவர் நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.



சமீபத்தில், தேனி எம்.பி ரவீந்திர நாத்குமாரைச் சந்தித்த இவர்கள், மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் கறவை மாடுகளில், கலப்பின மாடுகளைக் கொடுக்காமல், நாட்டு மாடுகளைக் கொடுத்தால், நாட்டு மாடுகள் இனம் அழிவில் இருந்து காக்கப்படும் எனக் கூறி, அதற்கான கோரிக்கை மனுவையும் அளித்தனர் மாணவர்கள்.


உண்மையில், நம்மை விட மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். அதை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்!" என்றார் புன்னகையோடு தலைமையாசிரியர். மாணவர்களுக்கு இணையாக நாமும் அமர்ந்து, அவர்களோடு பேசும்போது, இவர் ஆசிரியர், இவர் தலைமையாசிரியர் என்ற எண்ணம் இருக்காது. இதைக் கடைப்பிடிக்க ஆசிரியர்களுக்கும் சொன்னேன்.


கடந்த வருடம், இப்பள்ளியை தமிழக அரசு மாதிரி பள்ளியாக அறிவித்தது. கடந்த வருடம் 523 ஆக இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை இந்த வருடம் 1,194 ஆக உயந்துள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும் இப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமையுடன் கூறுகிறார்.